சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த ஓரிரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து வேறு விதமாகச் செய்திகள் வந்த போதும் கூட அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது மறைவு என்பது பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.
நம் வாழ்நாளில் வாழ்ந்த வாழும் மகாத்மா அவர். பாரத நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி ஆட்சியை ஆறு ஆண்டு காலம் அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்ததென்றால் அதற்கு வாஜ்பாய் அவர்களது அணுகுமுறை தான் காரணம்.ஏனைய கட்சியைச் சார்ந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் கூட அவர்களோடு நல்ல முறையிலே பழகக் கூடியவர் அவர்.
தமிழ் மீதும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ஐ.நா. அவையில் பேசும் போது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பேசும் போதும் கூட பல நேரங்களில் முதல் நாள் எனக்கு ஒரு செய்தி வரும். பாரதியைப் பற்றி ஏதோ சொன்னீர்களாமே என்று. அவர் என்ன கேட்கிறார் என்பதைப் புரிந்து அதை நான் ஆங்கிலத்திலும், தமிழிலும், தேவநாகரியிலும் எழுதி அனுப்புவேன். மறுநாள் அவர் அதை மேற்கோள் காட்டுவார். “முப்பது கோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று. தமிழ் மீது இருக்கின்ற ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்திச் சொல்வார்கள்.
எத்தனையோ அம்சங்கள், எத்தனையோ நல்ல குணங்கள். நான் அவரோடு நெருங்கிப் பழகி, கணேசன் என்று என்னைப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தேன் என்பது ஆண்டவன் அருளால் கிடைத்த பாக்யமாகக் கருதுகிறேன். வாஜ்பாய் அவர்களது இழப்பு என்பது ஈடு செய்ய இயலாதது… என்று குறிப்பிட்டுள்ளார்.