புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழே குறைக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேநேரம், இதுபற்றி அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அந்த முடிவை தமிழக-கேரள அரசுகள் மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கை பற்றி கேரள அரசு 24ஆம் தேதி அறிக்கை தரவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.