மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ள நிலையில், கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டுள்ளது.
கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதனிடையே மேட்டூர் அணை 3 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. ஜூலை 23ஆம் தேதி மேட்டூர் அணை முதல் முறையாக நிரம்பியது. பின்னர் மீண்டும், ஆக.11இல் 120 அடியை எட்டிய மேட்டூர் அணை, நேற்று இரவு 3ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப் படுகிறது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர் கரை புரண்டு ஓடுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப் பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.