கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கானோரை முப்படை வீரர்கள் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணப் பொருட்களும், உணவுகளும் வழங்கி காப்பாற்றினர்.
மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் நிவாரண முகாம்களில் சுமார் 8 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப தயாராகி வருகின்றனர்.
இந்நிலையியில் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தி்துள்ள கேரளாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் செங்கனூரில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.அங்கிருந்து பந்தளம், பத்தினம்திட்டா ஆகிய பகுதிகளுக்கும் சென்ற அவர். தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நேற்று இரவு கொச்சியில் தங்கிய அவர் அங்கிருந்து இன்று மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் இன்று மாலை கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் தில்லி செல்கிறார்.