இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றிய மகிந்த ராஜபக்சேவுக்கு, மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால், சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக, தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, இலங்கையின் மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்பு கூடுகள், பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த குழந்தைகள் அனைவரும் இறுதி போரின் போது ராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருப்பதாக இலங்கை சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்களுக்கும், ராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.