புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 63 வயதாகும் ரஞ்சன் கோகோய் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா. ரஞ்சன் கோகோய், கடந்த ஜனவரி மாதம் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, மரபுக்கு மீறிய வகையில், பத்திரிகையாளர்களை சந்தித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவின் மீது புகார்க் கடிதம் வாசித்தவர்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு ஒரு மாதம் முன்னதாக அடுத்த தலைமை நீதிபதி குறித்து, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி தெரிவிப்பார். இது ஒரு மரபாக கடைப் பிடிக்கப் படுகிறது.
இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதி யார் என பரிந்துரை செய்யும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பெயரை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார்.
வரும் அக். 3ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ளும் ரஞ்சன் கோகோய் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.