தெலங்கானா மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளைக் காலை கூடி, சட்டப்பேரவையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு மிகவும் ராசியான எண் 6 என்பதால், நாளைக் காலை 6 மணிக்கு அனைத்து அமைச்சர்களையும் தலைமைச் செயலகத்துக்கு வரக்கூறி உத்தரவிட்டுள்ளதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராசி எண் காரணமாகவே கடந்த 2-ம் தேதி நடந்த மாநாட்டின் போது, சட்டப் பேரவையை கலைப்பது தொடர்பாக அமைச்சரவை கூடியபோதிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நாளை(செப்.6-ம் தேதி) கூடும் தெலங்கானா அமைச்சரவை, சட்டப்பேரவையை கலைக்கப் பரிந்துரை செய்து அதற்கான தீர்மானத்தை ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனிடம் அளிக்கும். முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் போதே முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கும் நோக்கில் இந்தப் பரிந்துரை அளிக்கப்படுகிறது.
நாளை கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைச் செயலாளர் எஸ்.கே. ஜோஷி, தலைமை ஆலோசகர் ராஜீவ் சர்மா, முதன்மை செயலாளர் எஸ்.நரசிங் ராவ், சட்டசபைச் செயலாளர் நரசிம்மஆச்சார்யலு ஆகியோரை இன்று மாலை ஆளுநர் அழைத்துப் பேச உள்ளார்.
இந்த முடிவு அறிவிப்பது தொடர்பாக நேற்றில் இருந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை நாளை தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்கக் கோரி அமைச்சரவை பரிந்துரை செய்தபின், 7-ம் தேதி சித்திப்பேட்டை மாவட்டம் ஹஸ்னாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்கிறார்.
அதன்பின் அடுத்த 50 நாட்களுக்குத் தொடர்ந்து பிரஜாலா ஆசீர்வாத சபா என்றபெயரில் 100 பொதுக்கூட்டங்களை நடத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு பதவிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்துதான் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும். ஆனால், அப்போது தேர்தல் நடத்தினால், தனது கட்சிக்கு சாதகமாக இருக்காது என்பதால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முதல்வர் தயாராகிவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், மக்களிடம் அரசு சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக்கணிப்பில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அரசு செய்த பணிகள், திட்டங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அரசு இந்தத் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்கிறது.
தனது அரசின் சாதனைகள், திட்டங்கள், மக்கள் நலனுக்காக அறிவித்த சலுகைகள் போன்றவற்றின் மூலம் பங்காரு (தங்கம்) தெலங்கானாவை உருவாக்க முடியும். மக்கள் சுயமரியாதையுடன் வாழ தெலங்கனா ராஷ்ட்ரிய சமிதி துணை புரியும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறி வருகிறார். இதற்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்’’ எனத் தெரிவிக்கின்றனர்.