புது தில்லி: பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. அவர்கள் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்.
எனவே, 2016 இல் தங்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப் பட்டவர்களால் அளிக்கப் பட்ட மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் எனக் கூறி மத்திய அரசின் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில் இன்று பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் பட்டது இந்த விவகாரம் என்பது குறிப்பிடத் தக்கது.