புது தில்லி : ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
1861ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை குறித்த சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதனை அப்படியே எடுத்துக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவில் இதே அம்சம் சேர்க்கப் பட்டது.
அதன்படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும் அபராதம் விதிக்கலாம். இந்திய குற்றவியல் சட்டம் 377வது பிரிவின் படி, இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த சட்டப் பிரிவை எதிர்த்து ‘நாஸ்’ அறக்கட்டளை தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்தது. தில்லி உயர் நீதிமன்றமும் ‘இந்த சட்டப் பிரிவு சட்டவிரோதமானது’ என கடந்த 2009 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இதை அடுத்து, தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கடந்த 2013 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை செய்யப் பட்டன.
இந்த வழக்கின் விசாரணையின் போது, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உடல் உறவு கொள்வதை அனுமதிப்பது குறித்து நீதிமன்றத்தின் முடிவை ஏற்பதாகவும், அதே நேரம் ‘இயற்கைக்கு மாறான சிறுவர் – சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் கொள்ளும் உடலுறவு குற்றமாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது எனவும், மத்திய அரசு கூறியது.
இதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உள்ளது. அரசியல் சாசன சமநிலை என்பது எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்கப் படுவதில்லை. ஒருவரின் சுய விருப்பம் மறுக்கப்படுவது மரணத்துக்கு சமமானது. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல; ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.