புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங்குக்கு இடம் கிடைக்காமல் போனது. இதற்கு கேப்டன் தோனியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார் யோக்ராஜ் சிங். இந்நிலையில் அவர் ஹிந்தி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் … தோனி ஒன்றுமில்லாதவர். ஊடகங்கள் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள் போல் சித்திரித்து இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை மிகப்பெரிய வீரராக ஊதிப் பெரிதாக்கியுள்ளன. ஆனால் அத்தகைய பெருமைக்கு தோனி தகுதியானவர் இல்லை. அவர் ஒன்றுமே இல்லாதவராக இருந்த காலங்கள் இருந்தன. ஆனால் தற்போது அவர் தன்னை வளர்த்த ஊடகங்களையே கிண்டல் செய்கிறார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஊடகங்களையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கைதட்டும் ரசிகர்களையும் கேலி செய்கிறார். உண்மையில் நான் நிருபராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே தோனியை அடித்திருப்பேன். தோனி கர்வம் பிடித்தவர். ராவணனின் கர்வம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது போல் தோனிக்கும் ஒருநாள் வரும். ராவணனுக்கும் மேலாக தோனி தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி என்னிடம் கூறும் போது அவமானமாக உள்ளது. தோனியைக் குறை சொல்பவர்கள் அவர் மீதான பொறாமை காரணமாக சொல்கிறார்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் தோனி குறித்து கூறுவதைப் பார்த்தால் அவரைப் போன்ற மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 4 ஆவது வீரராகக் களம் இறங்கத் தயாராக இருந்தார். ஆனால் தோனி அவரை நிறுத்திவிட்டு, தான் களம் கண்டு பெரிய ஹீரோவானார். அப்போது அவர் ஏன் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும்? தன்னை பெரிய வீரராகக் கருதும் தோனி இந்த உலகக் கோப்பை போட்டி அரை இறுதியில் 4 ஆவது வீரராகக் களம் இறங்காதது ஏன்? -என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தன் தந்தையின் கருத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.
ஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari