புது தில்லி: பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் பாரத் பந்த், கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த முழு அடைப்பால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டும், கடைகள் அடைக்கப்பட்டும் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அதே நேரம், பாஜக., ஆளும் மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, பாரத் பந்த் வெற்றி என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள் என்று பாஜக., குற்றம் சாட்டுகிறது.
பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர்.
மும்பையில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமைப்பினர் திறக்கப்பட்ட கடைகளை மிரட்டி மூடச் செய்தனர். மூட மறுத்த கடைகளை அடித்து நொறுக்கினர்.
ம.பி.,யின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பங்க்கை அடித்து நொறுக்கி உள்ளனர்.
அஸ்ஸாமில் காங்கிரஸார் ரயில்வே பாதைகளில் அமர்ந்து ரயில்களை வழிமறித்தனர். டயர்களை தேசிய நெடுஞ்சாலைகளில் போட்டு எரித்து, புகைமண்டலமாக்கி சுற்றுச் சூழல் கேட்டினை ஏற்படுத்தினர். போலீஸார் போட்டிருந்த மூங்கில் தடுப்புகளுக்கு தீவைத்தனர்.
பீகாரில் ஜன்அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த பாரத் பந்த்..தால்,பீஹார் ஜஹனாபாத் பகுதியில் உயிர் பிழைத்திருக்க வேண்டிய சிறு குழந்தை ஒன்று மரணத்தைத் தழுவியது.