மும்பையில் 4 நாட்களுக்கு முன் மாயமான எச்.டி.எஃப்.சி., வங்கியின் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. அதிகார போட்டியால் அவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சாங்க்வி காணாமல் போனதாக அவரது மனைவி மத்திய மும்பை காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் 3 நாட்களுக்குபின் சித்தார்த் சங்க்வியின் காரானது கோபர்கைரெய்ன் ((koperkhairaine)) என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. காரில் பின் இருக்கையில் ரத்தக் கறை படிந்து இருந்ததுடன், கத்தியும் கிடந்ததால் வழக்கு பரபரப்பானது. அந்தக் காரை சம்பவ இடத்தில் நிறுத்திச் சென்றது யார் என விசாரிக்கையில், CBD பெலாபூரைச் சேர்ந்த சர்ஃபராஸ் ஷேக் என்பவர் போலீசில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹாஜி மலங் என்ற இடத்தில் சங்க்வியின் சடலம் மீட்கப்பட்டது. 3 பேர் சேர்ந்து அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் வைத்தே சித்தார்த் சங்வியை கொலை செய்ததாகவும், சடலத்தை மறைக்கும் பொறுப்பு தம்மிடம் வழங்கப்பட்டதாகவும் சர்ஃபராஸ் ஷேக் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கொள்ளை முயற்சியில் தாமே கொலை செய்ததாக ஒரு வாக்குமூலத்தை சர்ஃபராஸ் ஷேக் அளித்ததால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்ட்டது. கொலை செய்யப்பட்டுள்ள சித்தார்த் சங்வி குறுகிய காலத்தில் தொழில் திறமையால் துணைத்தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தது உடனிருந்தவர்களின் கண்ணை உறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவே இந்த வழக்கில் சிக்கலை அவிழ்க்க உதவியுள்ளது.
மும்பையை மட்டுமல்ல, நாட்டிலுள்ள வங்கி அதிகாரிகள், தொழில் முனைவோர் என பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இந்தச் சம்பவம். தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்ட வழக்குகள் பல உள்ளன என்றாலும், ஒரே அலுவலகத்தில் பணி புரியும் ஒருவரை சகாக்களே கொலை செய்யத் தூண்டுகோலாய் அமைந்த விநோத வழக்காக இது மாறியுள்ளது. இந்த ச்சம்பவத்தின் பின்னணி இதுதான்…
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவராக அண்மையில் பதவி உயர்வு பெற்றவர் சித்தார்த் சாங்வி. சித்தார்த் சாங்க்வியின் கார், நவி மும்பையில் உள்ள கைவிடப் பட்ட உயரமான அபார்ட்மெண்ட் அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில், பக்கத்து இருக்கையில் ரத்தக் கறை கொண்ட கத்தியுடன் கிடந்துள்ளது. சர்ப்ராஸ் ஷேக் என்ற 20 வயது கார் ஓட்டுநர் இது தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ளார். ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரால் தான் கொலை செய்ய நியமிக்கப் பட்டதாக அவன் கூறியுள்ளான். இதை அடுத்து அந்த நான்கு பேரும் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர். மேலும், சாங்க்வியின் சக பணியாளர்களும் விசாரணை வளயத்துள் வந்துள்ளனர்.
இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி துஷார் தோஷி கூறியபோது, இந்த விவகாரத்தில் கொலை, உடலை சிதைத்தல், மறைத்தல் என அனைத்திலும் சர்ப்ராஸ் ஷேக் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிந்தோம். ஞாயிற்றுக் கிழமை நவி மும்பையில் கைது செய்யப் பட்ட சர்ஃப்ராஸ் ஷேக், மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளான் என்று கூறினார்.
39 வயதாகும் வங்கி அலுவலரான சாங்க்வி, புதன்கிழமை மாலை 7.30 மணி அளவில் கமலா மில்ஸ் காம்பவுண்ட் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் காணவில்லை என புகார் கூறப்பட்டது. சாங்க்வி அன்றே கொல்லப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர் காணாமல் போன மறுநாளே அவரது கார் கண்டறியப் பட்டது.
சாங்க்வி தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸ் பகுதியில் தனது மனைவி மற்றும் எட்டு வயது மகனுடன் வசித்து வந்தார். 2007ஆம் ஆண்டு இந்த வங்கியில் சேர்ந்த பின்னர் கடன், சந்தையியல் பிரிவில் துடிப்புடன் சிறப்பாக செயலாற்றியுள்ளார். இந்நிலையில்தான் இவர் காணாமல் போனதாக மனைவி புகார் அளிக்க, ஞாயிறு அன்று அவரது சடலம் மீட்கப் பட்டுள்ளது.
புதன்கிழமை சாங்க்வி காணாமல் போன பின்னர் அணைத்து வைக்கப் பட்ட அவரது மொபைல் போன் நவி மும்பையில் சில நிமிடங்கள் இயக்கத்துக்கு வந்துள்ளது. அதை வைத்து போலீஸார் தேடியபோது ஷேக் மாட்டிக் கொண்டான். அவனிடம் இருந்து அவனது மொபைல் போனை பறிமுதல் செய்து, அதை ஆராய்ந்ததில், பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன. போலீஸாருக்கு இதன் பின்னணி புரிந்தது. இதை அடுத்தே சக பணியாளர்கள் நால்வர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.