சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.
திங்கள் கிழமை நேற்று இரவு திருப்பதி திருமலைக்கு பெருமாள் தரிசனத்துக்குச் சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் தரிசனம் செய்த பின், இரவு திருமலையில் தங்கினார் எடப்பாடி பழனிசாமி.
இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற அஷ்ட தள பாத பத்ம ஆராதனையில் குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றும் பெருமாளிடம் வேண்டிக் கொண்டதாகக் கூறினார்.