Homeஇந்தியாஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!

ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!

pm narendra modi mann ki baat - Dhinasari Tamil

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  நம்முடைய முப்படையினர் மீது பெருமிதம் கொள்ளாத இந்தியர் யாராவது இருக்க முடியுமா கூறுங்கள்.  ஒவ்வொரு இந்தியனும்…. அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும்….. சாதி, சமயம், வழிமுறை அல்லது மொழியாகட்டும்…. நமது இராணுவத்தினர் மீது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவும் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்.  நேற்று இந்தியாவின் 125 கோடி நாட்டுமக்களும், பராக்கிரம் பர்வ் என்ற வீரத்தின் வெற்றிவிழாவைக் கொண்டாடினார்கள்.

நாம் 2016ஆம் ஆண்டில் நடந்த துல்லியத் தாக்குதல் நினைவுகூரப்பட்டது; நமது தேசத்தின் மீது தீவிரவாதப் போர்வையில் கோரமாக நடந்தப்பட்ட மறைமுகப் போருக்கு நமது இராணுவத்தினர் பலமான பதிலடி கொடுத்தார்கள்.  நாட்டின் குடிமக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு நமது சக்தி என்ன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில், நாட்டில் பல்வேறு இடங்களில் நமது இராணுவத்தினர் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  நாம் எத்தனை தகுதி வாய்ந்தவர்கள், எப்படி நமது இராணுவத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நமது நாட்டுமக்களை காக்கின்றார்கள் பாருங்கள்.  பராக்கிரம் பர்வ போன்ற ஒரு நாள், இளைஞர்களுக்கு நமது இராணுவத்தினரின் பெருமிதமான பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது.

மேலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய நமக்கு உத்வேகம் அளிக்கின்றது.  நானும் வீரபூமியான இராஜஸ்தானத்தின் ஜோத்புரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன். யார் நமது நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்குகிறார்களோ, நமது இராணுவத்தினர் அவர்களுக்கு பலமான பதிலடி கொடுப்பார்கள் என்பது இப்போது முடிவு செய்யப்பட்டு விட்டது.  நாம் அமைதியில் நம்பிக்கை கொண்டவர்கள், இதற்கு மேலும் உந்துதல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில் கண்ணியத்தைக் காவு கொடுத்து தேசத்தின் இறையாண்மையை விலையாகக் கொடுப்பது என்பது எந்நாளும் சாத்தியமல்ல.

பாரதம் என்றுமே அமைதியை நிலைநாட்ட தன் உறுதியை அளித்திருக்கிறது, அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்து வந்திருக்கிறது.  20ஆம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களிலும் நமது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், அமைதியின் பொருட்டு தங்களின் மிகப்பெரிய தியாகத்தைப் புரிந்தார்கள், அதுவும் அந்தப் போர்களிலே நமக்கு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலே கூட.  நமது பார்வை மற்றவர்கள் பூமியின் மீது என்றுமே படிந்ததில்லை.  இது அமைதியின்பால் நமக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டுகிறது.  இஸ்ரேலின் ஹைஃபா போர் நடந்து 100 ஆண்டுகள் ஆன செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று நாம் மைசூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் lancersஇன் நமது வீரம் நிறைந்த வீரர்களை நினைவில் கொண்டோம்; தாக்கியவர்களிடமிருந்து ஹைஃபாவுக்கு அவர்கள் விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள்.

இதுவும் அமைதியின் திசையில் நமது இராணுவத்தினர் வாயிலாக புரியப்பட்ட ஒரு பராக்கிரமச் செயல் தான்.  இன்றும் கூட ஐ.நா.வின் பல்வேறு அமைதிகாக்கும் படைகளில் பாரதம் அதிக வீரர்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.  பல ஆண்டுகளாக நமது வீரம் நிறைந்த இராணுவத்தினர் நீல ஹெல்மெட் அணிந்து கொண்டு உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறார்கள்.

modi mankibaat - Dhinasari Tamil

எனதருமை நாட்டுமக்களே, வானம் தொடர்பான விஷயங்கள் என்றுமே வித்தியாசமாக இருக்கும்.  இந்த வகையில், வானில் தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இந்திய விமானப் படையினர் நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் கவனத்தையும் தங்கள்பால் ஈர்த்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமேதும் இல்லை.  அவர்கள் நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்திருக்கிறார்கள்.  சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தை ஒட்டி, அணிவகுப்பு தொடர்பாக மிகுந்த ஆசையோடும் ஆவலோடும் மக்கள் எதிர்பார்த்திருப்பவைகளில் ஒன்று விமான சாகஸம்; இதில் நமது விமானப்படையினர் திகைப்பை ஏற்படுத்தும் செயல்பாடுகளுடன் தங்களின் சக்தியை வெளிக்காட்டுவார்கள்.

அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று நாம் விமானப்படை நாளைக் கொண்டாடுகிறோம்.  1932ஆம் ஆண்டில், 6 விமான ஓட்டிகளும் 19 விமானப்படை வீரர்களுடன் ஒரு சிறிய அளவிலான தொடக்கம் மேற்கொண்ட நமது விமானப்படை, இன்று 21ஆம் நூற்றாண்டின் மிக அதிக சாகஸமும் சக்தியும் உடைய விமானப்படைகளில் இடம் பிடித்திருக்கிறது.  இது நம் நினைவுகளை இனிக்க வைக்கும் பயணம்.  நாட்டுக்காக தங்களின் சேவையை அளிக்கும் அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நான் என் நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1947ஆம் ஆண்டிலே, எதிர்பாராத வகையிலே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் தொடுத்த வேளையில், நமது விமானப்படையினர் தாம் ஸ்ரீ நகரை தாக்குதல்காரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்தார்கள், இந்திய இராணுவத்தினரின் ஆயுதங்களையும் யுத்த தளவாடங்களையும் போர்க்களத்தில் சரியான நேரத்தில் தரை இறக்கினார்கள்.  விமானப்படை 1965ஆம் ஆண்டிலே எதிரிகளுக்கு பலமான பதிலடி கொடுத்தார்கள்.

1971ஆம் ஆண்டின் வங்கதேச சுதந்திரப் போராட்டம் பற்றி அறியாதவர்கள் யார் இருப்பார்கள் சொல்லுங்கள்??  1999ஆம் ஆண்டு கர்கில் பிரதேசத்தை ஊடுருவல்காரர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதிலும், நமது விமானப்படை சிறப்பான பங்களிப்பை நல்கியிருக்கிறது.

டைகர் ஹில் பகுதியில் எதிரிகள் ஒளிந்திருந்த இடங்களில் எல்லாம் இரவுபகலாக குண்டு மழை பொழிந்து அவர்களை மண்ணைக் கவ்வச் செய்தார்கள்.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளாகட்டும், பேரிடர்க்காலங்களின் ஏற்பாடுகள் ஆகட்டும், நமது விமானப் படை வீரர்களின் மெச்சத்தக்க செயல்கள் காரணமாக நாடு விமானப்படைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

புயல், சூறாவளி, வெள்ளம் முதல், காட்டுத்தீ வரையிலான அனைத்து பேரிடர்களை சமாளிக்கவும், நாட்டுமக்களுக்கு உதவி செய்யவும் அவர்களின் உணர்வு அற்புதமானது.  நாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதில் விமானப்படையினர் ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தி இருக்கிறார்கள், தங்களின் ஒவ்வொரு துறையின் வாயில்களையும் பெண்களுக்காக திறந்து விட்டிருக்கிறார்கள்.  இப்போது விமானப்படையில் பெண்கள் சேர, குறுகிய காலப் பணியுடன் நிரந்தரப் பணி என்ற மாற்றும் கிடைக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து நான் செய்திருந்தேன்.  பாரத இராணுவத்தின் இராணுவப் படையினரிடம் ஆண் சக்தி மட்டுமல்ல, பெண் சக்தியின் பங்களிப்பும் அதே அளவுக்கு பெருகி வருகிறது என்று பெருமிதம் பொங்க நம்மால் கூற முடியும்.  பெண்கள் சக்தி படைத்தவர்கள் தாம், ஆனால் இப்போது ஆயுதபாணிகளாகவும் ஆகி வருகிறார்கள்.

modi2 - Dhinasari Tamil

எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் கடற்படையைச் சேர்ந்த நமது அதிகாரி ஒருவர் அபிலாஷ் டோமி, வாழ்வா சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டு வந்தார்.  டோமியை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பாக ஒட்டுமொத்த நாடுமே கவலைப்பட்டது.  அபிலாஷ் டோமி மிகவும் சாகஸம் நிறைந்த ஒரு அதிகாரி என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர் தனிமனிதனாக, எந்த ஒரு நவீன தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், ஒரு சிறிய படகில் பயணம் செய்து, உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட முதல் இந்தியர் ஆவார்.  கடந்த 80 நாட்களாக, அவர் இந்தியக் கடலின் தென்பகுதியில் Golden Globe Raceஇல் பங்கெடுக்க, கடலில் தனது வேகத்தைக் குறைக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தார்.

ஆனால் பயங்கரமான கடல் சூறாவளி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பாரத கடற்படையைச் சேர்ந்த இந்த வீரர், கடலில் பல நாட்கள் வரை தத்தளித்துக் கொண்டிருந்தார், போராடி வந்தார்.  எதையுமே உண்ணாமல் குடிக்காமல் போராடி வந்தாலும், வாழ்க்கையில் அவர் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை.  சாகஸம், மனவுறுதிப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றின் அற்புதமான எடுத்துக்காட்டு அவர்.  சில நாட்கள் முன்பாக, அபிலாஷை கடலிலிருந்து மீட்டெடுத்து வெளியே கொண்டு வந்த போது நான் அவருடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசினேன்.  நான் முன்பேயே கூட டோமியைச் சந்தித்திருக்கிறேன்.

இத்தனை சங்கடங்களைத் தாண்டியும் அவருடைய ஆர்வம் குறையவே இல்லை, நம்பிக்கை இருந்தது, மீண்டும் இதே போல பராக்கிரச் செயலைப் புரிய உறுதிப்பாடு இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தேசத்தின் இளைய சமுதாயத்திற்கு அவர் ஒரு கருத்தூக்கமாக விளங்குகிறார்.  நான் அபிலாஷ் டோமியின் சிறப்பான உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், அவரது இந்த சாகஸம், அவரது பராக்கிரமம், அவரது மனவுறுதிப்பாடு, போரிட்டு வெல்லும் சக்தி, கண்டிப்பாக நமது இளைஞர்களுக்கு உத்வேஹம் அளிக்கும்.

modi mankibaat2 - Dhinasari Tamil

என் இனிய நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நமது தேசத்திற்கு என்ன மகத்துவம் வாய்ந்தது என்பதை நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் நன்கறியும்.  இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு மேலும் ஒரு சிறப்பம்ஸம் உண்டு.  இப்போதிலிருந்து ஈராண்டுகளுக்கு நாம் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.  காந்தியடிகளின் கருத்துக்கள் உலகம் முழுவதையும் உத்வேகப்படுத்தி இருக்கிறது.

டாக்டர். மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியராகட்டும், நெல்ஸன் மண்டேலாவாகட்டும்… தங்கள் மக்களுக்கு சமத்துவத்தையும் கௌரவத்தையும் பெற்றுத்தர நீண்ட போராட்டத்தை நடத்தத் தேவையான ஆற்றலை ஒவ்வொருவரும் காந்தியடிகளின் கருத்துக்களிலிருந்து பெற்றிருக்கிறார்கள்.  இன்று மனதின் குரலில், வணக்கத்திற்குரிய அண்ணலின் மேலும் ஒரு மகத்துவம் நிறைந்த செயல் பற்றி நான் உங்களுடன் பேச விரும்புகிறேன், இதை நாட்டுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1941ஆம் ஆண்டு, காந்தியடிகள் Constructive Programme, அதாவது ஆக்கப்பூர்வமான திட்டம் என்ற வகையில் சில சிந்தனைகளை எழுத ஆரம்பித்தார்.  பின்னர் 1945ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த போது அவர், அந்த சிந்தனைகளின் தொகுப்புப் பிரதியை தயார் செய்தார்.  வணக்கத்திற்குரிய அண்ணல், விவசாயிகள், கிராமங்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகள் பாதுகாப்பு, தூய்மை, கல்வியின் பரவலாக்கம் போன்ற பல விஷயங்கள் பற்றித் தனது கருத்துக்களை நாட்டுமக்கள் முன்பாக வைத்தார்.

இதை காந்தி சார்ட்டர் என்றும் அழைக்கிறார்கள்.  மரியாதைக்குரிய அண்ணல் மக்களை ஒன்று திரட்டுபவர், இது இயல்பிலேயே அவருக்கு இருந்தது.  மக்களோடு இணைந்திருப்பது, அவர்களை இணைப்பது என்பதெல்லாம் அண்ணலின் சிறப்பம்சங்கள், இவை அவரது இயல்பிலேயே குடியிருந்தன.  அவரது தனித்துவத்தின் மிக பிரத்யேகமான வடிவிலே இதை ஒவ்வொருவருமே அனுபவித்திருக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் நாட்டிற்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தவர், இன்றியமையாதவர் என்ற உணர்வை அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுத்தினார்.

இதை ஒரு பரவலான மக்கள் போராட்டமாக மாற்றியது தான் சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய மிகப்பெரிய பங்களிப்பு.  சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, சமுதாயத்தின் அனைத்துத் துறையினர், அனைத்துப் பிரிவினர் தாங்களே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  அண்ணல் நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரத்தை அளித்துச் சென்றிருக்கிறார், இதை அடிக்கடி காந்தியடிகளின் இரட்சை என்றும் கூறுவார்கள்.

அதில் அண்ணல் என்ன கூறியிருக்கிறார் என்றால், ‘நான் உங்களுக்கு ஒரு காப்புக் கயிற்றைக் கொடுக்கிறேன், உங்களுக்கு எப்போதெல்லாம் ஐயப்பாடு ஏற்படுகிறதோ, உங்களுக்குள்ளே ’தான்’ என்ற உணர்வு மேலோங்குகிறதோ, இந்த அளவுகோலைக் கைக்கொள்ளுங்கள் – யார் அதிக ஏழையாகவும் பலவீனமானவராகவும் இருக்கிறாரோ, அந்த மனிதனைப் பாருங்கள், அவருடைய முகத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள், உங்கள் மனதிடம் கேளுங்கள், நீங்கள் எந்த செயலைச் செய்ய இருக்கிறீர்களோ, அதனால் அந்த மனிதனுக்கு எத்தனை பயன் ஏற்படும் என்று உங்கள் மனதிடம் கேட்டுப் பாருங்கள்.

இதனால் அவனது வாழ்க்கையும் எதிர்காலமும் பிரகாசப்படுமா!!  வயிற்றில் பட்டினியும், மனதில் வெறுமையும் தாண்டவமாடும் அந்தக் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இதனால் சுயராஜ்ஜியம் கிடைக்குமா!!  அப்போது உங்கள் சந்தேகங்கள் கரைவதை உங்களால் காண முடியும், உங்கள் ஆணவம் மறைந்து போகும்.”

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, காந்தியடிகளின் இந்தக் காப்புக் கயிறு இன்றும் அதே அளவு மகத்துவம் வாய்ந்தது.  இன்று நாட்டில் பெருகி வரும் மத்தியத்தட்டு மக்கள், அதிகரித்து வரும் அவர்களின் பொருளாதார சக்தி, மேம்பட்டு வரும் அவர்களின் வாங்கும் சக்தி…. நாம் ஏதாவது ஒரு பொருளை வாங்கச் சென்றாலும் அப்போது ஒரு கண நேரம் அண்ணலை நினைவிலிருத்த முடியுமா?  அண்ணலின் அந்த காப்புக்கயிற்றை நினைவில் கொள்ள இயலுமா!!

வாங்கும் வேளையில், இதனால் என் நாட்டில் இருக்கும் எந்தக் குடிமகனுக்கு பயன் ஏற்படும் என்று நினைத்துப் பார்க்க முடியுமா!!  யாருடைய முகத்திலே மகிழ்ச்சி மலரும்!!  நீங்கள் வாங்குவதால் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாருக்கு நல்விளைவு உண்டாகும்!!  இதனால் பரம ஏழைக்கு இலாபம் கிடைக்குமென்றால், என்னுடைய சந்தோஷம் பலமடங்காகும்.

காந்தியடிகளின் இந்த மந்திரத்தை நினைவில் தாங்கி, இனிவரும் நாட்களில் நாம் அனைவரும் ஏதாவது வாங்கும் போது, காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தருணத்தில், நாம் ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும், நமது நாட்டுமக்கள் யாருக்காவது நல்லது நடக்க வேண்டும், குறிப்பாக யார் இதை உருவாக்க தங்கள் வியர்வையை சிந்தியிருக்கிறார்களோ, யார் தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களோ, யார் தங்களின் திறன்களை அதில் விதைத்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் ஏதாவது வகையில் இலாபம் கிடைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது தான் காந்தியடிகளின் மந்திரம்… காப்புக்கயிறு, இதுவே அவரது செய்தி…. பரம ஏழை, அதிக பலவீனமான மனிதன் ஆகியோரின் வாழ்வில் உங்களின் ஒரு சிறிய முயற்சி, மிகப்பெரிய ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

modi mankibaat1 - Dhinasari Tamil

எனதருமை நாட்டுமக்களே, துப்புறவு செய்தால் சுதந்திரம் கிடைக்கும் என்றார் காந்தியடிகள்.  இது எப்படி நடக்கும் என்று அவருக்குத் தெரியாமலேயே கூட இருந்திருக்கலாம் – ஆனால் இது நடந்தது, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.  என்னுடைய இந்தச் சின்னஞ்சிறிய பணியால் என்னுடைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டில், பொருளாதார அதிகாரப் பங்களிப்பில், ஏழையிடம் தன் ஏழ்மைக்கு எதிராக போராடக்கூடிய சக்தி கிடைப்பதில் எப்படி மிகப்பெரிய பங்களுக்கு அளிக்க முடியும் என்று இதைப் போலவே இன்று நமக்குத் தோன்றலாம்.

ஆனால் இன்றைய அளவில் இதுவே உண்மையான தேசபக்தி, இதுவே அண்ணலுக்கு நாம் அளிக்கக்கூடிய கார்யாஞ்சலியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.  சிறப்பான சந்தர்ப்பங்களில் கதராடை மற்றும் கைத்தறியாடைகளை வாங்குவதால் பல நெசவாளிகளுக்கு உதவி கிடைக்கும்.

லால் பஹாதுர் சாஸ்திரி அவர்கள் பழைய கதராடைகளையோ, கிழிந்து போன துணிகளையோ பாதுகாப்பாக வைத்திருப்பார், ஏனென்றால் அதில் யாரோ ஒருவருடைய உழைப்பு மறைந்திருக்கிறது.  இந்தக் கதராடைகள் அனைத்தும் மிகுந்த சிரமத்தோடு நெய்யப்பட்டிருக்கின்றன, இவற்றின் ஒவ்வொரு இழையும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறுவார்.

நாட்டினிடத்தில் பற்றும், நாட்டுமக்களிடத்தில் பாசமும், சிறிய உருவம் படைத்த அந்த மாமனிதரிடத்தின் ஒவ்வொரு நாடிநரம்பிலும் கலந்திருந்தது.  வணக்கத்திற்குரிய அண்ணலுடன் சாஸ்த்ரி அவர்களின் பிறந்த நாளையும் இரண்டு நாட்கள் கழித்து நாம் கொண்டாட விருக்கிறோம்.  சாஸ்திரி அவர்களின் பெயரை உச்சரிக்கும் போதே பாரதவாசிகளான நம் மனங்களிலும் எல்லை காணாத ஒரு ச்ரத்தை பொங்குவதை உணர முடியும்.  இனிமையான அவருடைய தனித்துவம், நாட்டுமக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் பெருமையை ஏற்படுத்தி வைக்கிறது.

லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களிடம் இருந்த சிறப்பம்ஸம் என்னவென்றால், வெளியிலிருந்து பார்க்கையில் அவர் மிகவும் மென்மையானவராகத் தெரிவார், ஆனால் உள்ளே பாறையைப் போன்ற திட மனத்திராகத் திகழ்ந்தார்.  ஜெய் ஜவான் ஜெய் கிஸான் என்ற அவரது கோஷம் தான் அவரது நெடிய தனித்துவத்தின் அடையாளம்.  தேசத்தின்பால் அவர் கொண்டிருந்த சுயநலமற்ற ஈடுபாட்டின் பலனாகவே, சுமார் ஒண்ணரை ஆண்டுகள் என்ற குறைவான காலத்திலேயே, நாட்டின் வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும் வெற்றிச் சிகரத்தை எட்டக்கூடிய மந்திரத்தை அவரால் அளிக்க முடிந்தது.

எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் மரியாதைக்குரிய அண்ணலை நினைவில் கொள்கிறோம் எனும் போது தூய்மை பற்றிக் குறிப்பிடுவது இயல்பான விஷயம் தானே!!  செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று தூய்மையே சேவை என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது.  கோடிக்கணக்கான பேர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், தில்லியின் அம்பேட்கர் பள்ளிக் குழந்தைகளோடு தூய்மைப்பணியில் சேவை செய்ய எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் பள்ளிக்கான அடித்தளத்தை அமைத்தவர் மதிப்பிற்குரிய பாபா சாஹேப் தான்.  நாடு முழுவதிலும், அனைத்து வகையானவர்களும் 15ஆம் தேதியன்று இந்தச் சேவையில் ஈடுபட்டார்கள்.  அமைப்புகளும் கூட இதில் மிகுந்த உற்சாகத்தோடு தங்கள் பங்களிப்பை அளித்தார்கள்.

பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்டத்தினர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஊடகக் குழுவினர், பெருநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என, அனைவரும் பெரிய அளவில் தூய்மைப்பணியில் சேவைகளைச் செய்தார்கள்.

நான் இவர்கள் எல்லோருடைய பங்களிப்பிற்காக, அனைத்துத் தூய்மை விரும்பும் நாட்டுமக்களுக்கும் என் இருதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வாருங்கள் ஒரு தொலைபேசி அழைப்பைக் கேட்போம்.

வணக்கம், என் பெயர் ஷைத்தான் சிங், ராஜஸ்தான் மாநிலத்தின் பீகானேர் மாவட்டத்தின் பூகல் பகுதியிலிருந்து பேசுகிறேன்.  நான் கண்பார்வையற்றவன்.  என் இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் கிடையாது.  தூய்மையான பாரதம் தொடர்பாக மனதின் குரல் வாயிலாக மோதி அவர்கள் மேற்கொண்டு வரும் படிகள் மிகச் சிறப்பானவை என்று நான் கருதுகிறேன்.  பார்வைத்திறன் இல்லாத நாங்கள் கழிப்பறை செல்ல மிகவும் கஷ்டமாக இருந்தது.  இப்போது என்னவென்றால் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை ஏற்பட்டு விட்டது, எங்களுக்கு இதனால் மிகப்பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது.  அருமையான ஒரு முன்னெடுப்பை அவர் மேற்கொண்டிருக்கிறார், மேலும் இந்தப் பணி தொடரட்டும்.

பலப்பல நன்றிகள்.  நீங்கள் மிகப்பெரிய கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள்.  அனைவரின் வாழ்க்கையிலும் தூய்மைக்கென ஒரு மகத்துவம் இருக்கிறது.  தூய்மை பாரதம் இயக்கத்தின்படி உங்கள் வீட்டில் கழிப்பறை உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனால் உங்களுக்கு வசதியாக இருக்கிறது, நம்மனைவருக்கும் இதைவிட அதிக சந்தோஷம் தரக்கூடிய விஷயம் வேறு என்னவாக இருக்க முடியும்!!  பார்வைத்திறன் இல்லாத காரணத்தால் முன்னர் கழிப்பறைகள் இல்லாத காலத்தில் நீங்கள் எத்தனை இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியிருந்தது என்பதன் ஆழத்தை, இந்த இயக்கத்தோடு தொடர்புடைய மக்களுக்குக்கூட அளவிட முடியாமலிருந்திருக்கலாம்.  ஆனால் கழிப்பறைகள் ஏற்பட்ட பிறகு இது உங்களுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதை ஒருவேளை நீங்கள் தொலைபேசியில் அழைத்துச் சொல்லாமல் இருந்திருந்தால், இந்த இயக்கத்தோடு தொடர்புடைய மக்களின் கவனத்திற்கு நுணுக்கமான கண்ணோட்டம் கிடைக்காமலேயே போயிருக்கலாம். நான் உங்களுக்கு சிறப்பான வகையிலே என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நெஞ்சம் நிறை நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் இயக்கம், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகனைத்திலும் ஒரு வெற்றிக் கதையாகி விட்டிருக்கிறது.  இதைப் பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள்.  இந்த முறை இந்தியா, வரலாறு காணாத வகையில், உலகத்தின் மிகப்பெரிய தூய்மை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.  மஹாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாடு அதாவது Mahatma Gandhi International Sanitation Conventionஇல், உலகம் முழுவதிலும் உள்ள சுகாதார அமைச்சர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை தொடர்பான தங்களின் பரிசோதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  மஹாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாட்டின் நிறைவு விழா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, அண்ணலின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் தொடக்கத்தை ஒட்டி நடைபெறும்.

எனதருமை நாட்டுமக்களே, சம்ஸ்க்ருதத்தில் ஒரு வழக்கு உண்டு – ந்யாயமூலம் ஸ்வராஜ்யம் ஸ்யாத், அதாவது சுயராஜ்ஜியத்தின் வேர்கள் நீதியில் இருக்கிறது,, நீதி பற்றிப் பேசும் வேளையில், மனித உரிமைகள் பற்றிய உணர்வு அதில் முழுமையாக நிறைந்திருக்கிறது.  சுரண்டப்பட்ட, பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், அமைதி மற்றும் அவர்களுக்கான நீதியை உறுதி செய்ய விசேஷமாக இது முக்கியமானது.  டாக்டர். பாபாசாஹேப் அம்பேட்கர் அளித்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஏழைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட பல உட்கூறுகள் இருக்கின்றன.  அந்தத் தொலைநோக்கிலிருந்து உத்வேகம் பெற்று 1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதியன்று ‘தேசிய மனித உரிமைகள் ஆணையம்’, NHRC நிறுவப்பட்டது.  இந்த ஆணையம் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் சில நாட்களில் நிறைவடைய இருக்கின்றது.  இந்த ஆணையம் மனித உரிமைகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல், மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தும் பணியையும் ஆற்றி வருகிறது.  நம் இதயங்களுக்கு நெருக்கமான தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள், மனித உரிமைகள் என்பவை நமக்கெல்லாம் அந்நியமான கோட்பாடு அல்ல என்பார்.  நமது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சின்னத்தில் வேதக்காலத்திலிருந்து வரும் கொள்கையான ‘ஸர்வே பவந்து சுகின:’ என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது.  இந்த ஆணையமானது மனித உரிமைகள் மீதான பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது, தவிர இதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் பாராட்டத்தக்க பங்களிப்பை நல்கியிருக்கிறது.  இந்த 25 ஆண்டுக்காலப் பயணம் நாட்டு மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு, ஒரு நம்பிக்கை அளிக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.  ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கு, சிறப்பான ஜனநாயக விழுமியங்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய செயல்பாட்டை இது அளிக்கிறது.  இன்று தேசிய அளவில் மனித உரிமைகளின் பணிகளுடன் கூடவே, 26 மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் இயங்கி வருகின்றன.  ஒரு சமுதாயம் என்ற வகையில் நாம் மனித உரிமைகளின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதை நடைமுறையில் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.  இது தான் அனைவருடனும், அனைவருக்கான முன்னேற்றம் என்பதன் ஆதாரம்.

எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் மாதத்தில், ஜெய் பிரகாஷ் நாராயண் அவர்கள், ராஜ்மாதா விஜய்ராஜே சிந்தியா அவர்கள் ஆகியோர் பிறந்த நூற்றாண்டுத் தொடக்கம் வருகின்றன.  இந்த மாமனிதர்கள் அனைவரும் நம்மனைவருக்கும் உத்வேகம் அளித்து வந்த்ருக்கிறார்கள், அவர்களை நாம் நினைவில் கொள்வோம்.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் அவர்களின் பிறந்த நாள் வருகிறது, நான் அடுத்த மனதின் குரலில் இதுபற்றி விரிவான முறையில் பேசுவேன். ஆனால் இன்று அவரைப் பற்றி ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால், சில ஆண்டுகளாகவே சர்தார் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று ஒற்றுமைக்கான ஒட்டம், இந்தியாவின் ஒவ்வொரு சிறிய நகரிலும், பகுதியிலும், கிராமங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டும் நாம் முயற்சிகள் மேற்கொண்டு நமது கிராமங்கள், வட்டாரங்கள், நகரங்கள், பெருநகரங்களில் ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஒற்றுமைக்கான ஓட்டம் தான் சர்தார் அவர்களைப் பற்றி நாம் சிறப்பாக நினைத்துப் பார்க்க சிறப்பான வழி ஏனென்றால், அவர் தன் வாழ்க்கை முழுவதும் தேசத்தின் ஒற்றுமைக்காகவே செயல்புரிந்தார்.  நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன், அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று ஒற்றுமைக்கான ஓட்டம் வாயிலாக சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், தேசத்தின் ஒவ்வொரு அலகிற்கும், ஒற்றுமையின் இழை கொண்டு ஒன்றிணைக்கும் நமது முயற்சிகளுக்கு நாம் பலம் கொடுக்க வேண்டும், இதுவே அவருக்கு நாமளிக்கும் சிறப்பான ச்ரத்தாஞ்சலியாக அமையும்.

எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.

மனதின் குரல் 48ஆவது பகுதி : ஒலிபரப்பு நாள் 30.09.2018

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன் (ஆலிண்டியா ரேடியோ, சென்னை)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,498FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...