புதுச்சேரி அரசு விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் ஒருவரை ஒருவர் ப்ளீஸ் கோ… ப்ளீஸ் கோ.. என்று அடுத்தவரை வெளியே போகுமாறு கூறி மேடையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் விழா, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசு விழா நடைபெற்ற இடம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் தொகுதி எம்எல்ஏ அன்பழகனும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும்போது புதுச்சேரி அரசை கடுமையாக சாடினார். புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் நிலையில், தனது தொகுதியில் குப்பைத் தொட்டி வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
ஆனால், இது அரசு விழா என்பதால் நேரத்தை கடைப்பிடித்து சீக்கிரம் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கிரண்பேடி கூறினார்.
அதற்கு செவிசாய்க்காத எம்.எல்.ஏ., அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த கிரண் பேடி, எழுந்து சென்று, எம்.எல்.ஏ., அருகில் சென்று, விரைந்து பேச்சை முடித்துக் கொள்ளவும் என்று வலியுறுத்தினார்.
An MLA’s Mike had to b turned off when he persistently rejected any req from panel of Hble Ministers to limit his speech.
He rejected all appeals. He shouted back. I hav seen him do this earlier too. Event was to give away awards for good work done in making Puducherry ODF @ANI— Kiran Bedi (@thekiranbedi) October 2, 2018
இது எம்.எல்.ஏ.,வுக்கு கோபத்தை வரவழைத்தது. இதை அடுத்து அவர் பதிலுக்கு கத்திப் பேசினார். வாக்குவாதம் வளர்ந்தது. அப்போது எம்.எல்.ஏ., பேசும் மைக் அணைக்கப்பட்டது. இது அன்பழகனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து வாக்குவாதம் முற்றியது. மேடையிலிருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு ப்ளீஸ் கோ… என்று எம்.எல்.ஏ.,வை கிரண்பேடி கூற, பதிலுக்கு எம்எல்ஏ அன்பழகனும் ப்ளீஸ் கோ என்று கூறினார். மீண்டும் இரு கைகளையும் குவித்து… ப்ளீஸ் கோ என்று கிரண்பேடி கூறியபோது எம்எல்ஏ அன்பழகனும் பதிலுக்கு இரு கரம் கூப்பி ப்ளீஸ் கோ என்றார். தொடர்ந்து தனக்கு ஆதரவாக யாராவது பேசுவார்களா என்று யோசித்து அருகில் இருந்தவரிடம் சென்று முறையிட்டார். ஆனால் பேச்சு மூச்சு எதுவும் இல்லை.
இதை அடுத்து மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்ற எம்எல்ஏ அன்பழகன், செய்தியாளர்களிடம் பேசிய போது, கிரண்பேடியின் செயல் அநாகரீகமானது… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை, கொல்லைப்புறமாக வந்த ஆளுநர் கிரண்பேடி அவமதித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், அரசு விழாவில் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு தாம் வலியுறுத்தியதாகவும், அதிமுக எம்எல்ஏ அன்பழகனை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கிரண்பேடி விளக்கம் அளித்தார்.
இருப்பினும், ஆளுநர் தமக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கருதி அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும், நல்லவேளை பழைய ஐபிஎஸ் ஆபீஸர் மன நிலையில் கையை நீட்டி அடிக்காமல் விட்டாரே என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
அந்த நிகழ்வின் காணொளிக் காட்சி இதோ…