பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள வைரமுத்து, தாம் வாங்கிய தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
இணைய தளத்தில் தற்போது பிரபலமாகி வரும் #மீடூ இயக்கம் மூலம் ஏராளமான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து தங்களது இளமைக்கால அனுபவங்களை, தாங்கள் சந்தித்து வரும் துயரங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே பத்திரிக்கை ஆசிரியராக இருந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர் மீதும் ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்தனர். எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது, தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தியதாக #மீடூ மூலம் வெளிப்படுத்தினர். இதனால் இது அரசியல் ரீதியில் பிரச்னையாக உருவெடுத்தது.
எம்.ஜே.அக்பர் மீது கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர், இன்று காலை நாடு திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் பாலியல் புகார் குறித்து கேட்டனர். அப்போது அது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடுவதாகக் கூறினார்.
பின்னர் அவர், தனது வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. எம்.ஜே.அக்பர் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக., சார்பு அரசியல் செல்வாக்குள்ள கவிஞர் வைரமுத்து, பலரையும் மிரட்டி பாலியல் சீண்டல் செய்ததாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பாடகி சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பின்னர், வரிசையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது முன்வைக்கப் படுகின்றன. தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் பலரும் இவ்வாறு டிவிட்டர் வலைத்தளம் மூலம் #மீடூ இயக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதை அடுத்து தன் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு தெரிவிக்கப் படுவதாகவும், தன் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் வைரமுத்து இன்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார். மேலும், இது குறித்து கடந்த ஒரு வார காலமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாகவும், தேவையான ஆவணங்களைத் தொகுத்து வைத்துள்ளதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.
இதனிடையே, வைரமுத்து தனது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரவலாக கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. சமூக வலைத்தளங்களில், வைரமுத்து தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்பது உண்மையானால், அவற்றை நிரூபித்துவிட்டு, அதன் பின்னர் தேசிய விருதுகளை ஏற்றுக் கொள்ளட்டும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.