சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்பட ஆயிரத்து 500-க்கும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு முதன்முறையாக இன்று மாலை 5 மணி அளவில், ஐயப்பன் கோயின் நடை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் யாரும் கோயிலுக்குச் செல்லக் கூடாது என கூறி வரும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அதனை வலியுறுத்தி சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். எனினும், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பேருந்துகளில் சோதனை நடத்தும் இந்து அமைப்பினர், பேருந்துகளில் பெண்கள் இருக்கிறார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மலையடிவாரப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.