முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டிய போது, பாதுகாப்பு கருதி நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்து தேக்கி வைக்குமாறு கேரள அரசு முறையிட்டது. இதனையடுத்து, அணையில் தேக்கி வைக்க வேண்டிய நீரின் அளவை முடிவு செய்யுமாறு பேரிடர் மேலாண்மை துறையின் துணைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துணைக்குழுவினர், அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, அணை பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் இக்குழுவின் தலைவராக பொதுப்பணித்துறையின், முதன்மை செயலாளரும், துணைத் தலைவராக தேனி மாவட்ட ஆட்சியர் இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குழுவின் உறுப்பினர்களாக தேனி மாவட்ட வருவாய் அதிகாரி, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர், காவல் கண்காணிப்பாளர், தலைமை வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருப்பார்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.