விசாகப்பட்டினத்தில் புதன் கிழமை நாளை நடைபெறுகின்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், அதிவிரைவாக 10,000 ஒரு நாள் போட்டி ரன்களை எடுத்தவர் என்ற உலக சாதனையை செய்யக் கூடும்!
விராட் கோலி, தற்போது 204 இன்னிங்ஸ் விளையாடி, அதில் சராசரியாக அரை சதம் வைத்து, 9,919 ரன் குவித்துள்ளார். நாளை நடைபெறும் 205வது போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், உலகிலேயே அதிவேக 10,000 ஒருநாள் ரன்களை சேர்த்த சாதனையாளர் என்ற பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.
தற்போது முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவர், 259 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்காக 11 ஆண்டுகள் 103 நாட்களில் 10,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். ஆனால் அவரை விட மிகக் குறுகிய காலத்திலேயே சச்சினின் இந்த சாதனையை முறியடிக்கத் தயாராகி விட்டார் விராட் கோலி. நாளைய போட்டியில் விராட் கோலி 81 ரன் எடுக்கும் பட்சத்தில், 10,000 ரன் என்ற சாதனையைச் செய்து, சச்சினை பட்டியலின் இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி விடுவார்.
சச்சினுக்கு அடுத்து, சௌரவ் கங்குலி 263 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்கள் எடுத்து, பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த வரிசையில்…
ரிக்கி பாண்டிங்: 266 இன்னிங்ஸ்
ஜாக் காலிஸ் : 272 இன்னிங்ஸ்
எம்.எஸ்.தோனி : 273 இன்னிங்ஸ்
பிரையன் லாரா: 278 இன்னிங்ஸ்
ராகுல் டிராவிட் : 287 இன்னிங்ஸ்
தில்ஷன் : 293 இன்னிங்ஸ்
சங்கக்காரா: 296 இன்னிங்ஸ்
இஞ்ஜமாம் உல் ஹக்: 299 இன்னிங்ஸ்
சனத் ஜெயசூரியா: 328 இன்னிங்ஸ்
மகேலா ஜெயவர்தனே: 333 இன்னிங்ஸ்
என, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்துள்ளனர். விராட் கோலி நாளை இந்த சாதனையை நிகழ்த்தினால் அது உலக சாதனையாக அமைவதுடன், இந்தப் பட்டியலில் அனைவரும் ஒவ்வொரு வரிசை இறங்கிவிடுவர்!