புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக் ஆயுக்த நீதிமன்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், லோக் ஆயுக்த நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.
இந்த வழக்கில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது மற்றும் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எந்த தகவல்களையும் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு, லோக் ஆயுக்த அமைப்பதில் அக்கறை காட்டவில்லையா? கால தாமதம் செய்வதைத்தான் அது விரும்புகிறதா? என கேள்வி எழுப்பியது.
மேலும், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இன்று மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், பிப்ரவரி மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என கூறியது.
இதைத் தொடர்ந்து அடுத்த 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்த அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.