புது தில்லி: தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் நவ.6ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. தீபாவளி என்றாலே குழந்தைகளின் குதூகலத்துக்கு வகையாய் அமைவது பட்டாசுகள். ஒரு நாள் முழுக்க பட்டாசுகளை சிறியவர்களும் பெரியவர்களுமாய் போட்டு வெடித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு மீது விசாரணை நடத்தப் பட்டது. இதில், உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில் தீபாவளி அன்று இரவு 8:00 – 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவானது பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடும் சிறுவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து, பல்வேறு தரப்பினரும் பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு கொடுத்தனர். இதை அடுத்து, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வெடி வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனக் கூறி, தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டது.
இருப்பினும், வெடி வெடிக்க இரவு நேரத்துக்கு பதிலாக பகல் நேரத்தில் 2 மணி நேரம் விருப்பம் போல் தேர்வு செய்யலாம் என ஹிந்துக்களின் பண்டிகையை கொண்டாட விதிகளுக்கு உட்பட்டு நிபந்தனைகளுடன் கூடிய வகையில் கொண்டாட அனுமதித்துள்ளதாக பெரும்பான்மை சமுதாய மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.