பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.
கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை சபரிமலை சந்நிதான நடை திறக்கப் படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கோயிலின் நடை திறக்கப் படவுள்ள நிலையில், நிகழ்வுகள் குறித்து படம் பிடிக்க முன்னமேயே ஊடகத்தின் தயாராக வந்துள்ளனர்.
மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனம் எல்லாம் முடிந்து, நடை அடைக்கப் பட்ட பின்னர் தான் அடுத்த கட்ட விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அடம்பிடிக்கும் நிலையில், அதற்குள் எப்படியாவது இளம் பெண்களை சபரிமலையில் ஏற்றி தங்கள் வன்மத்தை வெளிப்படுத்த மாநில அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதற்காக, சபரிமலை சந்நிதானத்துக்கு ஹெலிகாப்டரிலேயே பெண்களை ஏற்றிச் செல்லும் யோசனையைக் கூட மாநில அரசு பரிசீலித்தது.
சபரிமலையைக் காப்போம் என பாஜக., நடைப்பயணம் செய்து வருகிறது. இதனால் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முற்போக்கு கேரளத்தையே தாம் விரும்புவதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐயப்பன் கோயில் நடை திறப்பில் இருந்து அங்கிருக்கும் அரசியல் சூழல் வரை படம் பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும், இன்றே பத்திரிக்கையாளர்கள் பம்பையை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.