இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம்

xi-xin-ping-wife புது தில்லி: சீன அதிபர் ஜீ ஜின் பிங் இன்று பாகிஸ்தான் செல்கிறார். இந்நிலையில், அவர் சி.பி.இ.சி. என்னும் சீன–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தின்கீழ் செய்யப்படும் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இதனை பாகிஸ்தான் நிதித்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சி.பி.இ.சி. திட்டம், 3 ஆயிரம் கி.மீ. தொலைவிலானது. சீனாவின் மேற்குப் பகுதியையும், பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள கிவதார் துறைமுகத்தையும் இணைக்கும். சாலை, ரயில், எரிசக்தி, குழாய்கள், முதலீட்டுப் பூங்காக்கள் என பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய திட்டம் இது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இது அமையும். சீனா இதை நிராகரித்துள்ள போதும் இதற்கான யோசனை இல்லமலில்லை. ஜீ ஜின் பிங் பயணத்தின்போது, 5 பில்லியன் டாலர் மதிப்பிலான, அதாவது சுமார் ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு சப்ளை செய்வது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் கடற்படையின் பலம் அதிகரிக்கும். அதே நேரம் இது இந்தியாவுக்கு மிகவும் கவலை தரக்கூடிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.