சுஷ்மாவிடம் நலம் விசாரித்த சோனியா, ராகுல்: அமளிக்கு இடையே அனுசரணை

புது தில்லி: இன்று நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியபோது, கிடைத்த சிறிது நேர இடைவெளியில், அரசியல் வேறுபாடுகளை மறந்து, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நலம் விசாரித்தனர். சோனியா காந்தி நிறம் மீதான விமர்சனத்துக்காக அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளி காரணமாக மக்களவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது கிடைத்த இடைவேளையில், சுஷ்மாவை சந்தித்து சோனியாவும், ராகுலும் நலம் விசாரித்தனர். மேலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரிய சூலே ஆகியோரும் சுஷ்மாவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.