துவங்கியது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும், பிஎஸ் என் எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது. தொலைத் தொடர்புத் துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான சாதனங்கள் வழங்க வேண்டும், கிராமப்புறங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும், கூடுதல் கட்டணமின்றி 4ஜி அலைக்கற்றையை தாராளமயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பாரிமுனை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தில்லியில் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.