அம்பேத்கர் இல்லாவிடில் நான் எங்கே இருந்திருப்பேனோ? : மோடி கலக்கம்

புது தில்லி: அம்பேத்கரால்தான் நான் பிரதமர் ஆனேன். அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ என்று பிரதமர் மோடி கலக்கத்துடன் பேசினார். தில்லியில் நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் இல்லை. அவர் எனக்கு ஓர் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தவர். அவரால்தான் அரசியலில் இந்த உயர்ந்த நிலையை நா அடைந்துள்ளேன். அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ? இதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இத்தகைய உந்துசக்தி மனிதரைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை ‘தலித் தலைவர்’ என்று சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித் தலைவர் இல்லை, மனித இனத்தின் தலைவர். அவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். அதனால்தான், தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை உருவாக்கினார். இன்றும் இவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி -, எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக் கீற்றாகத் திகழ்ந்தார் என்று பேசினார்.