மத்திய அரசு மொழி விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி: இந்தி மொழி விருதுகளுக்கு முன்னர் சூட்டப்பட்டிருந்த இந்திரா மட்டும் ராஜீவ் காந்தி பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பெயர்களில் வழங்கப்பட்ட விருதுகள் தற்போது, ராஜ் பாஷா கீர்த்தி புரஸ்கார், ராஜ் பாஷா கவுரவ் புரஸ்கார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஒவ்வோர் ஆண்டும் இந்தி மொழி நாளில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விருதை வழங்கும். கடந்த மாதம் 25-ம் தேதி இந்த விருதுகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டதில் அரசியல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்வாக நடவடிக்கையாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.