பணக்காரர்களுக்காக செயல்படும் மோடி அரசு: கேஜ்ரிவால் விமர்சனம்

புது தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “விவசாயிகள் மோடி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஓட்டு போட்டனர். தற்போது அரசு மீது வைத்த நம்பிக்கையை ஓர் ஆண்டுக்குள் விவசாயிகள் இழந்துவிட்டனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்டு அவர்கள் போராடுகின்றனர். நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது. இது பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது. ஏதாவது திட்டம் தடைப்பட்டு நிற்கிறதா? அதுபோன்று எதுவும் இல்லாத நிலையில் பிறகு ஏன் இந்த அவசரச் சட்டம்? – என்று கேள்வி எழுப்பினார்.