ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணைய குழு ஹைதராபாத் வருகை

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகளை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையக் குழு, அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஹைதராபாத் வந்தது. இந்தக் குழு அடுத்த 3 நாட்கள் ஹைதராபாத் தில் தங்கி திருப்பதி வனப்பகுதியில் நடைபெற்ற செம்மரக் கடத்தல் என்கவுன்ட்டர் உட்பட பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளது. ஹைதராபாத்தில் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகளில் மனித உரிமை மீறல் குறித்து நேரடி விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணைக்கு முன்னர், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசியபோது, நாட்டில் மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமைகளை மீறாமல் காக்க வேண்டியது அரசுகளின் பொறுப்பு. ஆந்திர அரசுக்கு தலைநகர் முக்கியம். தெலங்கானா அரசுக்கு வளர்ச்சி முக்கியம். ஆனால் இதர விஷயங்களில் அலட்சியம் கூடாது. இந்த 3 நாட்களில் தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்து வந்துள்ள பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும். பின்னர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். என்றார்.