விவசாயி தற்கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; அவை ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று அவை கூடியதும், விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உடனடியாக விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால் ஒத்திவைப்புத் தீர்மானக் கோரிக்கையை அவைத்தலைவர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இடதுசாரி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவிய போது குறுக்கிட்டுப் பேசிய அவைத்தலைவர், “விவசாயி தற்கொலை சம்பவம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. ஆனால், இங்கு விவசாயிகள் பிரச்னை குறித்து யாருக்குமே அக்கறை இல்லை. இவ்விவகாரத்தை அரசியலாக்க முற்பட வேண்டாம்” என்று கூறினார். ஆனால் தொடர்ந்து அவையில் அமளி நிலவியதால், மக்களவையை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, “விவசாயி தற்கொலை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவாக ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது. பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயி தற்கொலைச் சம்பவம் தொடர்பாக மீண்டும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.