என்கவுன்டர் தொடர்பில் நீதி விசாரணை ஏன் இல்லை?: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

ஹைதராபாத்: திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை? என்று ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசார் மற்றும் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் என்றும் போலீசார் அவர்களை முன்கூட்டியே பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, உச்ச நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 3 பேர் கொண்ட மனித உரிமை ஆணைய அமர்வு, ஹைதராபாத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது. ஆணையத்தின் முன்னர், ஆந்திர அரசு சார்பில் கூடுதல் டி.ஜி.பி. வினய் ரஞ்சன் ரே ஆஜரானார். அவரிடம் மனித உரிமை ஆணைய அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இதில் குளறுபடி உள்ளது. வருவாய்த் துறையினர் ஏன் விசாரணை நடத்தவில்லை. வருவாய்த்துறை விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை. இந்தப் படுகொலை குறித்து, ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்று கேள்விகளை எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவுசெய்ய காலதாமதம் ஆனது ஏன் என்றும் கேள்வி எழுப்பி, ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனத்தைத் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு ஆந்திர அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.