மும்பை மாடலிங் பெண் பலாத்காரம்: 3 போலீஸார் உள்பட 6 பேர் கைது

மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக ஏப். 3ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, தலைமைக் காவலர் கோடே ஆகியோர் அந்த ஹோட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சாகர், இப்ராகிம் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் அவர்களுடன் இருந்தனர். ஆனால், அந்தச் சோதனையின்போது பாலியல் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 28 வயது மாடலிங் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் ஆன நிலையில், மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவை இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பெண் சந்தித்து நடந்தவற்றை அவரிடம் தெரிவித்து புகார் அளித்தார். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, கோடே உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பலாத்காரம், பாலியல் தொந்தரவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.