பெண் தாசில்தார் வீட்டில் நோட்டு கட்டுகள்! ரூபாய் 93 லட்சத்தை சீஸ் செய்த ஏசிபி அதிகாரிகள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தம தாசில்தாராக அரசாங்கத்திடமிருந்து விருது பெற்ற பெண் அதிகாரி, தன் வீட்டில் நோட்டுக் கட்டுகளை மறைத்து வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸின் வேட்டையில் சிக்கினார்.

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய விஆர்ஓ கொடுத்த புகாரின்படி தாசில்தார் வீட்டில் சோதனையிட்டு அதிகாரிகள் அங்கே கண்டுபிடிக்கப் பட்ட நோட்டுக் கட்டுகளை பார்த்து வாய்பிளந்து மலைத்து நின்றனர். கைப்பற்றிய ரொக்கம் 93 லட்சம் ரூபாய்.

ஓர் அரசாங்க அதிகாரி வீட்டில் இவ்வளவு அதிக ரொக்கம் பிடிபடுவது கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்டை மண்டலம் “தத்தாயப்பல்லி” யைச் சேர்ந்த “மாமிடிப்ல்லி பாஸ்கர்” என்ற விவசாயி தன் 9.07 ஏக்கர் நிலத்திற்கு ஒதுக்கிய நம்பர் சர்வேயில் இல்லை என்றும், அதனை சரி பார்க்கும் படியும் கோரிக்கை விடுத்து சில மாதங்களாக தாசில்தார் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.

“கொந்துர்கா “என்ற இடத்தின் விஆர்ஓ.,வாக பணியில் இருக்கும் அனந்தய்யா, அதற்கு எட்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும் என்று பாஸ்கரிடம் வற்புறுத்தினார். தனக்கு 5 லட்ச ரூபாய் என்றும், தாசில்தார் லாவண்யாவுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்தால்தான் வேலை உடனடியாக முடிக்கப் படும் என்றும் கூறினார்.

அரசாங்கப் பணியில் உள்ளவர்களுக்கு  லஞ்சம் தர வேண்டுமா என்று எண்ணிய பாஸ்கர் இந்த விஷயத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் கூறிய படி புதன்கிழமை தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று விஆர்ஓ அனந்தய்யாவுக்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார்.

ஆனால் இதில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தாசில்தார் லாவண்யா உத்தரவுப் படியே லஞ்சம் வாங்கி வருவதாகவும் அனந்தய்யா தெரிவித்ததால் ஹயத் நகரில் உள்ள லாவண்யா வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு எல்லாம் 2000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக வெளி வரவே அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

மொத்தம் 93 லட்சம் ரொக்கமும் 50 பவுன் தங்கமும் பறிமுதல் செய்யப் பட்டது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா உத்தமமான தாசில்தார் விருது பெற்றவர் என்பதுதான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி.

மத்திய அரசு இதற்காகத்தான் டிமானிடைசேஷன் என பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததும், அதன் பின்னும் இது போல் பணம் கைமாறியும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாலும்தான், மின்னணு பண பரிவர்த்தனையை அரசு ஊக்குவிக்கிறது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...