நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் தர ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, உட்கட்ட மைப்பு மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக 8.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாரத்மாலா திட்டம் நாடு முழுவதும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியைத் திரட்டுவதில் பல்வேறு புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ் சாலைத்துறை கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதித் திரட்ட முடிவு செய்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பாரத்மாலா திட்டத்துக்கான நிதி செஸ் வரி, சுங்கக் கட்டண வருவாய், சந்தை கடன்கள், தனியார் துறை பங்களிப்பு, காப்பீடு நிதி, ஓய்வுகால நிதி, மசாலா பாண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட உள்ளன. அடுத்த 30 வருடங்களில் நிதித் திரட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.