ஹிந்து மக்களின் மத நம்பிக்கைகளில் நீதித் துறை எல்லை மீற வேண்டாம்: சிவசேனை

ஹிந்து மக்களின் மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நீதித்துறை எல்லை மீற வேண்டாம் என்று சிவசேனைக் கட்சி எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் “தஹி வரண்டி’ என்னும் உறியடித் திருவிழாவுக்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்ததைக் கண்டிக்கும் வகையில் சிவசேனைக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான சாம்னாவில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரத்தில் நெடுங்காலமாக உறியடித் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த உறியடித் திருவிழாவில் அமைக்கப்படும் மனித கோபுரங்களின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், 18 வயதுக்குள்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் யாவும் ஹிந்து மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. இதுதொடர்பான விவகாரங்களில் நீதித் துறை எல்லை மீறக்கூடாது.

நம் நாட்டில் ஜனநாயக முறைப்படி, தங்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அரசு, மக்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கிறது. இதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமே தவிர, தேவையின்றி தலையிடக் கூடாது.

அரசு செய்ய வேண்டிய பணிகளை நீதிமன்றங்கள் கையில் எடுக்கும்பட்சத்தில், அதற்கு வரும் எதிர்ப்புகளையும் அவை சந்திக்க நேரிடும்.

ஹிந்து பண்டிகைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் பிறப்பித்து வரும் உத்தரவுகளால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது அரசுக்குத் தெரியும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.