
‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்ட கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.. சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்..

ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..
இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல… சைட் அடிக்கலாம் போலவே இருந்தது..
ஆர்வி.உதயகுமார் சொன்னதை கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது..
நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அது நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும்.
இதற்கு முந்தைய விழாவில் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப்போக அது வேறு விதமாக பரவிவிட்டது.. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதைப் பற்றி சொன்னேன்” என்று கூறினார்.