‘ஜீவசமாதி’ன்னு சொல்லி… உண்டியல் கலெக்சன்..! சாமியார் மீது வழக்குப் பதிவு!

ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி உண்டியல் பணம் வசூலித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

irulappasamy3

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறி, பொது மக்களை ஏமாற்றி உண்டியல் காசு வசூல் செய்தார் என்று, திடீர் பரபரப்பைக் கிளப்பிய சாமியார் இருளப்பசாமி, அவரது மகன் உள்பட 7 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையில், இருளப்பசாமி என்பவர், செப்.13ஆம் தேதி நள்ளிரவு முதல் காலை 5 மணிக்குள் தாம் ஜீவசமாதி அடையப் போவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஜீவசமாதி அடைந்த மகான்களின் சமாதிகளுக்குச் சென்று, தாங்கள் நினைத்தது நடந்தேற பிரார்த்தனை செய்து, அவ்வாறே பலருக்கும் நடந்துள்ளது.

இதனால் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எண்ணத்தில் இருந்த சாதாரண மக்கள், இது போல் சாமியார் ஒருவர் ஜீவசமாதி அடைவதைப் பார்த்து, தங்கள் மனசில் உள்ள விருப்பங்கள் நிறைவேற பிரார்த்தனை செய்யலாம் என்று பாசாங்கரையில் குவிந்தனர்.

தொடர்ந்து இருளப்பசாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். சாமியார் இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதற்காக 10 அடி நீளம்,10 அடி அகலம் கொண்ட குழியும் தோண்டப்பட்டு ஜீவசமாதிக்கான ஏற்பாடுகல் செய்யப் பட்டன.

Jeeva Samadhi cheating case against irulappasami son

சட்ட ரீதியாக இது போன்று ஜீவசமாதி அடைதல் என்பது தவறென்றாலும், இது ஒரு தரப்பின் ஆன்மிக நம்பிக்கையின் பால் மேற்கொள்ளப் படுவது என்பதால், 13ஆம் தேதி நள்ளிரவு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரும் அங்கே காத்திருந்து, அங்கே மேற்கொள்ளப் படும் சடங்குகள் குறித்து கண்காணித்து வந்தனர்.

சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஜீவசமாதி அடைவதாக கூறிய இருளப்பசாமியின் உடல்நலம் குறித்து டாக்டர்களும் அவ்வப்போது பரிசோதித்த வண்ணம் இருந்தனர்.

இருளப்பசாமியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் போல் காணப் பட்டார். இருப்பினும், தன்னை குழிக்குள் வைக்கும் படி நள்ளிரவு 1 மணிக்கு இருளப்பசாமி கூறினார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். தொடர்ந்து காலை 5.30 மணி வரை ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்த போதும் ஜீவசமாதிக்கான நிலையை இருளப்பசாமி எட்டவில்லை.

irulappasami sivagangai

இதை அடுத்து, கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்தினார் ஆட்சியர் ஜெயகாந்தன். அவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எனினும் ஜீவசமாதிக்கு முயன்ற சாமியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஆட்சியர் மக்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட நேரம் முடிந்து விட்டதால், இன்னொரு நாளில் ஜீவசமாதி அடையப் போவதாகக் கூறினார் இருளப்பசாமி. இதனால் அவர் ஜீவசமாதி அடைவதைக் காண வந்திருந்த அன்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதனிடையே, ஜீவசமாதி என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி உண்டியல் பணம் வசூலித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இருளப்பசாமி, அவரது மகன் கண்ணாயிரம் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :