
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை வேறு ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடையநல்லூர், மங்களபுரம், அச்சம்பட்டி, சொக்கம்பட்டி, குமந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2,260 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
2013-இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.
ஆனால் கடையநல்லூர் அரசு பெண்கள் பள்ளியில் மொத்தம் 10 ஆண் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் சிலர் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையநல்லூரில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள் அனைவரையும் வேறு ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.