சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி வரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
மழை தொடர்வதாலும், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் கடும் அவதியடைந்தனர்.
கனமழை காரணமாக, வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் பல மணி நேரமாக வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் சாலைகளில் இயல்பான போக்குவரத்து இன்றி, கடும் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர்.
சென்னை நகர்ப் பகுதியில் கனமழை காரணமாக, ’வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வடசென்னை பகுதிகளான திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள நீரால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான வானகரம் பகுதியில் இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னை மட்டுமின்றி, வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் அறிகுறியாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். பள்ளிகள் இயங்கும் என்ற ஆட்சியரின் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியரின் பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.