
சிவகங்கை மாவட்டம் உருவாட்டி அருகே அம்பலார்(பட்டம்) ஒருவர் ஆட்டுமந்தை வைத்திருந்தார். அவரின் மந்தையில் அடிக்கடி ஆடுகள் திருடுபோயின. அம்பலாரால் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர் மருது சகோதரர்களிடம் முறையிட்டார்!
சின்னமருதுவின் நண்பர், பெரும் வீரனாக விளங்கிய ராமுக்கோன் என்பவரை மருது பாண்டியர்கள் காவலுக்கு அனுப்பி வைத்தனர். அன்று இரவு ராமு கோனார் ஆட்டு மந்தையில் காவலில் இருந்தார். திடீரென்று ஒரு கரடி ஆட்டை தாக்கியது. கோனார் சீறி பாய்ந்து கரடியிடம் சண்டையிட்டு தன் உடைவாளால் அதன் தலையை வெட்டி எடுத்தார்
ராமுக்கோனார், கரடி தலையுடன் மருது சகோதரர்களிடம் சென்று இந்த கரடிதான் ஆட்டை பிடித்து உண்கிறது என்றார். மருது சகோதரர்கள் மிரண்டு போயினர்! கரடியின் தலையை வெட்டி எடுத்து வந்து சாதாரணமாக சொல்கிறாரே என்று கோனாரை கௌரவித்தனர்.

மேலும், ராமுக்கோனார் வீரத்தை அனைவரும் அறியும் வண்ணம் காளையார் கோயிலை புனரமைக்கும் பொழுது ராஜகோபுரத்தில் கரடித் தலையுடன் கூடிய ராமுக்கோன் சிலையை நிறுவினார்கள். மருது சகோதரர்கள் சிலையே சேதப்படுத்தப்படும் இந்தக் காலத்தில் ராமுக்கோனார் சிலை இப்போது இருப்பதாக தெரியவில்லை!
சிலை இல்லாவிட்டாலும் சிவகங்கை மக்களிடையே உலவிக் கொண்டிருக்கும் வரலாறாக வாழ்ந்து வருகிறார் ராமு கோனார்.!
-மதுரை கா. ராஜேஷ்கண்ணா
அக்டோபர் 24: மருது சகோதரர்கள் நினைவுநாள்!