
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அமெரிக்கப் பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளைஞருக்கும் ஹிந்து மத பாரம்பரியப்படி திருமணம் நடைபெற்றது. இதன் மூலம், தனக்கு ஹிந்து மத பாரம்பரியப் படி திருமணம் நடக்க வேண்டும் என்ற மணப்பெண்ணின் ஆசை நிறைவெறியது!
காரைக்குடி அடுத்த தட்டடிப் புதூரைச் சேர்ந்த செல்லையா – தவமணி தம்பதியின் மகன் கந்தசாமி. இவர் ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆராய்ச்சிப் படிப்பை முடித்த அவர் தற்போது அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அப்போது, அமெரிக்காவில் காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் இருக்கும் சிகாகோவை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் கந்தசாமி.

இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த கந்தசாமிக்கும் எலிசபெத்துக்கும், பெற்றோரின் சம்மதத்துடன் ஹிந்து பாரம்பரிய முறைப்படி சடங்குகள் செய்யப் பட்டு, திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
தமக்கு தமிழகத்தின் பாரம்பரியம் பிடித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ஹிந்து மத பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், புதுமணப் பெண் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
இவர்களின் திருமணத்துக்கு கந்தசாமியின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து கிராமத்தினர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.