முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்ட னை விதித்து தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் வெங்கடேஷ் (24). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 11.5.2015 அன்று பெட்ரோல் நிலையம் அருகில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எடையூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கடேஷை கொலை செய்த சித்தமல்லியைச் சேர்ந்த விஜி என்கிற விஜயேந்திரன் (31), எடையூர் அருகே சோழி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வழக்கு திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். சீனிவாசன் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயேந்திரன் மற்றும் சிவக்குமார் (இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார்) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.