ஜனவரியில் பெய்த மழை: விவசாயிகளுக்கு பாதிப்பா?

 ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெய்த மழை: விவசாயிகளுக்கு இழப்பா? வரமா?
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓரளவே மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று பிபிசி தமிழோசை, காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களிடம் கேட்டபோது , ''டெல்டா மாவட்டங்களில் ஆற்று நீரை பயன்படுத்தி நடக்கும் சம்பா பயிர் காலத்தில் தேவையான நீர் இல்லாததால், பெரிதாக எந்த சாகுபடியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் வடிமுனை குழாய்கள் மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளன'' என்று தெரிவித்தார்.
''தற்போது இந்த சம்பா பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது. இவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆனால், இது விரைவில் வடிந்து விடும் '' என்று தெரிவித்த ஆறுபாதி கல்யாணம், மேலும் கூறுகையில், ''ஆனால், அதே சமயத்தில் தற்போது பெய்த இந்த மழையால் நெல்லில் 22 முதல் 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது'' என்று கூறினார்.
போதுமான அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத சூழலில், தனியார் கொள்முதல் நிலையங்கள் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்காது என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை பற்றி அவர் குறிப்பிட்டார்.
''கடும் கோடையையும், வறட்சியையும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள இந்த சூழலில், தற்போது பெய்த இந்த மழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்'' என்று ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார். ஆனால், இந்த மழை போதுமானதாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் குளிர்காலத்திலும் சில சமயங்களில் மழை பெய்வதுண்டு. ஆனால், இந்த ஆண்டு சற்றே அதிகமாக இது பெய்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதத்தில் 17 மில்லிமீட்டர் அளவு மழை பெய்வது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு, இது வரை 38 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது'' என்று தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேற்கு திசை நோக்கி சென்று விட்ட நிலையில், சென்னையில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பில்லை. அதே வேளையில் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளது எனவும், குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
குளிர்காலமான ஜனவரி மாதத்தில் மழை பெய்வது இயற்கை தான் என்று தெரிவித்த பாலச்சந்திரன், இது போன்ற காலகட்டத்தில் மழை பெய்வதற்கு வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றமும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றமும் தான் காரணம் என்று மேலும் குறிப்பிட்டார்.