1.75 கோடி கார்டுகளில் உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது

ஜனவரி., வரை, 1.75 கோடி ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், உள் தாள் ஒட்டப்பட்டு, அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கு, உள் தாள் ஒட்டும் பணி, ரேஷன் கடைகளில், ஜன., 2ல் துவங்கியது. இதுவரை, 1.75 கோடி கார்டுகளில், உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது.
உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரிசி, சர்க்கரை, காவலர் கார்டுகளுக்கு, ரேஷன் கடைகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது. பொருளில்லா ரேஷன் கார்டுதாரர்கள், இணையதளத்தில் புதுப்பித்து கொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 35 ஆயிரம் பொருளில்லா கார்டுகள் உட்பட, 1.93 கோடி ரேஷன் கார்டுகள் பதிவாகியுள்ளன. அதில், 1.75 கோடி கார்டுகளில் மட்டும் உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது. உள்தாள் ஒட்டுவதிலும், சிலர் அலட்சியம் காட்டி வருகின்றனர். உள் தாளில், வரும் டிசம்பர்., வரை செல்லும் என, குறிப்பிட்டிருந்தாலும், ஏப்ரல்., முதல், 'ஸ்மார்ட்' கார்டு உறுதியாக வழங்கப்படும். இவ்வறு அவர் கூறினார்.