சசிகலாவுக்கு புதிய சிக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி (ஃபெரா) வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
1990களில் வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்தது. அதையடுத்து, சசிகலா 1996இல் கைது செய்யப்பட்டார். 
அதன் பின்னர், சசிகலா ஜாமீனில் வெளியே வந்தார். இதனையடுத்து இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கீழ் நீதிமன்றம் விடுவித்ததை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும் சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
2015இல் சசிகலா மீதான இரு ஃபெரா வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவிற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.