பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தயார் : துரை.முருகன்

*பன்னீரை ஆதரிக்க தயார்: துரைமுருகன்*
வியாழன், 2 பிப் 2017
சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பாராட்டிப் பேசினார்.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 23ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து சபை நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கவர்னர் உரைக்கு பதில் தெரிவித்து, உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களது கேள்விக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபை கூட்டம் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவையில் இருக்கும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர் கட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேராக சந்திக்கும் வாய்ப்பு வந்தால்கூட பெரும்பாலும் அதை தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாக வடமாநில அரசியல் சம்பவங்கள்போல், அரசியல் கலாச்சாரம் மாறி வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டசபையின் இறுதிக்கூட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிப்பது போல் துரைமுருகன் பாராட்டிப் பேசினார். அதன் விபரம் இதோ…
"நன்றாக பாராட்டுகிறோம்…
நீங்களே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க பாராட்டுகிறோம்…
5 ஆண்டுகளும் நீங்களே முதல்வராக இருக்க பாராட்டுகிறோம்…
அதற்கான சக்திகளை நாங்கள் தருகிறோம்…
அதற்கு எதிராக உங்கள் பின்னால் இருப்பவர்கள் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்..
மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்…"
என்று சிலேடையாகக் கூறினார்.
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியினர், தங்களுக்குப் பிடிக்காத பேச்சுகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கிவிடுவது வழக்கம். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களை முகம் சுளிக்க வைத்த
 துரைமுருகனின் இந்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து இன்னும் நீக்கப்படாதது ஆச்சர்யத்தை அளிக்கிறது.