மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக, 'மொபைல் போன் இன்டர்நெட்' பயன்பாட்டு கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., இன்று முதல் அதிரடியாக குறைக்கிறது.

பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 'ஜியோ' போன்ற புதிய நிறுவனங்களின் வரவை சமாளிக்க, வாடிக்கையாளர்களுக்கு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது, 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தில், புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பி.எஸ்.என்.எல்., 'சிறப்பு விலை வவுச்சர்'களுக்கு, கூடுதல், 'டேட்டா' வழங்குகிறது.

• வழக்கமாக, 291 ரூபாய் திட்டத்தில், '2 ஜி.பி., டேட்டா' வழங்கப்படும். இதன், அளவு, நான்கு மடங்கு கூடுகிறது. செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.

• 78 ரூபாய் திட்டத்தில், வழங்கப்பட்ட, '1 ஜி.பி., டேட்டா' இனி, 2 ஜி.பி.,யாக வழங்கப்படும். இதன் செல்லத்தக்க காலம், 28 நாட்கள்.

இந்த புதிய அறிவிப்பின்படி, பி.எஸ்.என்.எல்., 'பிரீ – பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, 1. ஜி.பி., டேட்டா, 36 ரூபாய்க்கு கிடைக்கும். 'ஜியோ' நிறுவனம், தற்போது, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

அதன் வருகைக்கு பின், போட்டி நிறுவனங்கள், '1 ஜி.பி., டேட்டா' விலையை, 50 ரூபாய்க்கு கீழ் குறைத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., அவர்களை விட, கூடுதலாக விலையை குறைத்துள்ளது. இச்சலுகை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.