ஓரம் கட்டப்படும் தம்பிதுரை, வேலுமணி?

சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி ஆகியோர் ஓரம் கட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
*அவமானப்பட்டார் :*
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், டில்லி பணிகளை கவனிக்க அனுப்பப்பட்டவர் அ.தி.மு.க., – எம்.பி., தம்பிதுரை. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், அவர் மறைந்த பிறகு சசிகலாவுக்கு ஆதரவாகவும் டில்லியில் கட்சி பணிகளை தீவிரமாக கவனித்தவர் தம்பிதுரை. குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு அவர் சார்பாக, டில்லியில் பல முறை அவமானப்படுத்தப்பட்ட போதும் சிறிதும் சளைக்காமல் செயல்பட்டவர். 
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க வாய்ப்பு வழங்காத போதும், லோக்சபாவில் குரல் எழுப்பி கட்சிக்காக அவமானப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவி தம்பிதுரைக்கு கிடைக்கும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கிய பிறகு, கொங்குமண்டலத்தில் கவுண்டர் இனத்தை சேர்ந்த செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதே போல், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்த தம்பிதுரைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை நேரில் சந்தித்து சசிகலா கோரிக்கை விடுத்த போது, அவருடன் தம்பிதுரை அழைத்து செல்லப்படவில்லை. கூவத்தூர் சொகுசு விடுதிகளில் தங்கி இருக்கும் அ.தி.மு.க., – எம்.பி.,க்களை சந்திக்க, நேற்று சசிகலா சென்ற போதும், தம்பிதுரை அழைத்து செல்லப்படவில்லை.
*வேலுமணி நிலை*
கடந்த, 10ம் தேதி எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், தம்பிதுரையை சசிகலா அனைவர் முன்பே, கடுமையாக விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், 10ம் தேதி இரவு முதல் எங்கும் செல்லாமல், யாருடனும் பேசாமல் தம்பிதுரை உள்ளார் என, சசிகலா தரப்பை சேர்ந்த கட்சி நிர்வாகிகளே கூறி வருகின்றனர் . இதே போல் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் சசிகலா தரப்பினரால் ஓரம் கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த செங்கோட்டையனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வேலுமணிக்கு இல்லை. கொங்கு மண்டலத்தில் வேலுமணிக்கு எதிர் கோஷ்டியாக செயல்படும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை, இன்று போயஸ் கார்டனுக்கு அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். ஆனால், வேலுமணிக்கு அழைப்பு இல்லை. 
கட்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வரும் தம்பிதுரை மற்றும் வேலுமணி ஓரம் கட்டப்படுவது மற்ற கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.