தருமபுரி இளவரசன் தற்கொலைதான்!: வழக்கு முடிப்பு

சென்னை: 
தருமபுரி இளவரசன் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த தகவலை ஏற்று, அவரது  மரணம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  சிபிசிஐடி., போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த பெண் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யா இளவரசனை பிரிந்து, தாயுடன் சென்ற நிலையில், கடந்த 2013 ஜூலை 4ல், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள  ரயில்வே தண்டவாளத்தில் இளவரசன் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.