முதல்வராகும் காய் நகர்த்தலில் டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் மனக்கசப்பு தொடங்கிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று பார்த்த அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், கூடவே ஒரு பட்டியலையும் காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளார். தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய பட்டியல் தான் அது… 
இதை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பட்டியலை படித்து பார்த்த பழனிச்சாமி அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டாராம். காரணம், இடமாற்ற பட்டியலில் முதல் பெயராக இருந்தது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பெயர். கடந்த டிசம்பரில் தான் கிரிஜா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று பெயரெடுத்தவர். கிரிஜாவுக்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்டவர் தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம். 
ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவும் சூழலில் அதிகார வர்க்கத்தையும் பகைத்துக் கொள்ள முதல்வர் விரும்பவில்லை. ஆகவே தான் மன்னார்குடி கும்பல் கொடுத்த பட்டியலை ஓரங்கட்டிவிட்டதாக கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.
இது போக, தம்பிதுரை, டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எடப்பாடி இம்மூவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறார்கள் என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரம். இந்த தகவல் எல்லாம் சிறைக்குள் இருக்கும் சித்திக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பொறுமை காக்கும் படி பெங்களூரூவில் இருந்து தகவல் வந்துள்ளதையடுத்து அனைத்து அமைச்சர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் தினகரன் கொண்டு வந்துள்ளார். 
பொருளாதார குற்ற வழக்கால், ஏற்கனவே அமைச்சராகும் தனது கனவு கவர்னரால் சிதைக்கபட்ட கொதிப்பில் இருக்கும் தினகரன், சித்தி சென்னைக்கு மாறுதலான பிறகி, இந்த பட்டியல் விஷயத்தை பெரிதாக்கி முதல்வராகும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கியுள்ளாராம்.